search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூக்கடை வியாபாரிகள்"

    தஞ்சை பூச்சந்தையில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தமாட்டோம். அதற்கு மாற்றாக துணிப்பைகளை பயன்படுத்துவோம் என வியாபாரிகள் தெரிவித்தனர். #Plasticban
    தஞ்சாவூர்:

    பிளாஸ்டிக்குகளால் ஆன தட்டு, தண்ணீர் பாக்கெட், கப், பை உள்ளிட்ட 14 வகையான பொருட்களை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை நேற்றுமுதல் அமலுக்கு வந்தது.

    தஞ்சையில் பெரும்பாலான கடைகளில் தண்ணீர் பாக்கெட், கப் விற்பனை அடியோடு நிறுத்தப்பட்டது. ஒரு சில கடைகளில் மறைத்து வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ஒரு சில டீக்கடைகளில் இட்லி, தோசைகளை பார்சலாக கட்டி எளிதில் மக்கும் வகையிலான கைப்பைகளை வழங்கினர். பேப்பர் தட்டுகளில் இட்லி, பூரி, தோசைகள் பரிமாறப்பட்டன. தஞ்சை சரபோஜி மார்க்கெட்டில் சில மளிகை கடைகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக பேப்பரால் ஆன பைகளில் தான் மளிகை சாமான்களை கட்டி கொடுத்தனர்.

    தஞ்சை பூக்கார தெருவில் பூ சந்தை கடைகளில் துணிப்பையில் பூக்களை போட்டு வழங்கினர். மாநகராட்சி சார்பில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என விளம்பர பேனர், பூச்சந்தையில் வைக்கப்பட்டுள்ளது.

    பூக்கள் வாங்க வருபவர்கள் வீட்டில் இருந்து துணிப்பைகளை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். பூச்சந்தையில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தமாட்டோம். அதற்கு மாற்றாக துணிப்பைகளை பயன்படுத்துவோம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    தஞ்சையில் இறைச்சி கடைகளில் கறிவாங்க, பொதுமக்கள் பாத்திரங்களை கொண்டு வருகின்றனர்.

    தஞ்சை மாவட்டத்தில் டாஸ்மாக் பார்களில் குடிக்க வரும் மதுப்பிரியர்களுக்கு பிளாஸ்டிக் கப், தண்ணீர் பாக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டது. இந்த 2 பொருட்களும் அரசு தடை செய்த பொருட்கள் பட்டியலில் வருவதால் நேற்று முதல் விற்பனை செய்யப்படவில்லை. இதற்கு மாற்றாக மதுப்பிரியர்களுக்கு சில பார்களில் கண்ணாடி டம்ளர், தண்ணீர் பாட்டிலும் வழங்கப்பட்டது. இதற்கு நுழைவு கட்டணமாக ரூ.20 வரை வசூலிக்கப்பட்டது.  #Plasticban

    ×